இந்த நூல் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான தொழிற்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்த பிராங்க் மக்கோர்ட்( Frank Mccourt,1930 – 2009) தன் வகுப்பறை அனுபவமாக எழுதிய 'Teacher Man' என்னும் நூலின் வாசிப்பனுபவம் ஆகும். மக்கோர்ட்டின் வார்த்தைகளோடு தம் வார்த்தைகளையும் கலந்தே இந்த நூலை பேராசிரியர் ச.மாடசாமி எழுதியுள்ளார்.
மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை திறந்து வைத்தவர். அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட.
தம் வகுப்பறை அனுபவங்களை Teacher Man என்ற நூலாக வடித்த போது மக்கோர்ட்டின் வயது 75. ‘எழுத ஏன் இவ்வளவு தாமதம்?’ என்ற கேள்வி வந்தபோது, ‘என்ன செய்ய? இத்தனை ஆண்டுகளாய் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடம் நடத்தும் போது வேறு எதைச் செய்ய முடியும்?’ என்று பதில் சொன்னவர் மக்கோர்ட்.
பட்டப்படிப்பு, அடுத்து ஆசிரியர் பயிற்சி என வழக்கமான பாதையில் ஆசிரியரானவரல்ல மக்கோர்ட். இளமையிலேயே தந்தையின் பிரிவு, தாங்க முடியாத வறுமை என கல்லும் முள்ளுமான கடினமான பாதையில் விழுந்து எழுந்து கடைசியாக வகுப்பறைக்குள் நுழைந்தவர். எனவேதான் இவரது வகுப்பறை சம்பிரதாயம் ஊறிப்போன வகுப்பறையில் இருந்து விலகுகிறது.
முதல் நாள் பள்ளி வகுப்பறையில் நுழைகிறார் மக்கோர்ட்…
வகுப்பறையில அசாதாரணமான சூழல் நிலவுகிறது. மாணவர்களில் ஒருவன் அடுத்தவன் மீது மதிய உணவுக்கு அவன் அம்மா கொடுத்தனுப்பிய தாளில் சுற்றிய சாண்ட்விச்சை வீசியெறிகிறான். அது சரியாக கரும்பலகையின் முன்னால் விழுகிறது. புது வாத்தியார் என்ன செய்யப் போகிறார் என்று வகுப்பு காத்திருக்கிறது.
*"ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் தியரிகளை மூளைகளில் நிரப்புவார்கள். சிக்கலான தருணத்தை எப்படிச் சந்திப்பது என்று சொல்லித் தருவதில்லை"*என்று மக்கோர்ட் ஆதங்கப்படுகிறார்.
‘ஏய் இங்கே வா! எறிந்த சாண்ட்விச்சை எடு!’ என்பதா? அல்லது தானே அதைத் தூக்கிக் குப்பையில் போடுவதா? – மக்கோர்ட் யோசிக்கிறார்.
சரி! என்னதான் செய்தார் மக்கோர்ட்?... அந்த சாண்ட்விச்சை எடுத்துச் சாப்பிட்டார். I ate the Sandwich என்று கரும்பலகையில் எழுதுகிறார். வகுப்பறை நிர்வாகத்தில் என் முதல் செயல்பாடு என்கிறார். My first act of classroom management!
முன்னால் – 16 வயது நிரம்பிய மாணவர்கள் 34 பேர் ஆண்களும் பெண்களுமாய்..! அவர்களின் எதிர்வினை என்ன? நம்ப முடியாத வியப்பு அவர்கள் விழிகளில். தரையில் கிடந்த சாண்ட்விச்சை எல்லோரும் பார்க்க எடுத்துச் சாப்பிடும் முதல் ஆசிரியர்!. சாண்ட்விச்சைச் சாப்பிட்டுக் கையை நக்குகிறார் ‘ஆ! என்ன ருசி!’ என்கிறார்.
சாண்ட்விச் சுற்றிய தாளைப் பந்து போல் சுருட்டிச் சட்டென்று வகுப்பின் ஓரத்தில் இருந்த குப்பைக்கூடைக்குள் வீசுகிறார். வகுப்பு உற்சாகக் கூச்சலிடுகிறது.
மக்கோர்ட்டுக்குப் புரிகிறது. ‘ஓ! பாடம் நடத்துவது இதுதானா? இவ்வளவுதானா?’ ஒருகணம் வகுப்பறையை உள்ளங்கையில் எடுத்துவிட்டது போல் தன்னம்பிக்கை உண்டாகிறது.
இவ்வாறு தன் பணிக் கால அனுபவத்தை இந்நூலில் அழகுற எடுத்துரைத்துள்ளார் மக்கோர்ட். ஒரு முழுமையான ஆசிரிய அனுபவங்கள் இந்நூலில். அத்தனையும் பொன்மொழிகள் போல. அதில் சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
மக்கோர்ட் மொழிகளில் சில:
*அங்கீகரிக்கும் பார்வைகள்*
பார்வைகள் முக்கியமானவை. 'இன்றைக்குப் பாடம் நல்லா இருந்துச்சு!' என்று வெளிப்படையாக சொல்லிப் பாராட்ட சில மாணவர்கள் கூச்சப்படுவார்கள். ஆனால் வகுப்பு முடிந்து வெளியேறும்போது அங்கீகரிக்கும் பார்வையோடு உங்களை பார்த்தபடி வெளியேறுவார்கள். அங்கீகரிக்கும் பார்வைகள் மிக இதமானவை.
*ஒரே ஒருவன்*
ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான். அந்த ஒருவன் நான்தான்.
*முடிந்து போகும்*
நீ அவர்களைப் பார்த்து கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத் திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்து விட்டது.
இன்னும் இன்னும் நிறைய. சுதந்திரமான வகுப்பறையை நேசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம். படித்துப் பாருங்களேன்.. நிச்சயம் உங்கள் வகுப்பறையில் ஒரு மாற்றம் இருக்கும்.