‘குறுநாவல்’ என்ற நிலையில் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நூல் அறியப்பட்டாலும் இந்நூலானது, நீண்ட நகைச்சுவைக் கதையான ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்னும் கதையையும், பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் ஒன்றான ‘செவிசாய்த்துக் கேளுங்கள், அந்திமப் பேராசை’ என்னும் உரையையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
பஷீரின் இருவேறுபட்ட படைப்பாற்றலை இந்நூலில் காணமுடிகிறது: ஒன்று நகைச் சுவையாகவும், மற்றொன்று ‘தான் காணும் இப்பிரபஞ்சம் என்னவாகப் போகிறதோ’ என்ற ஆதங்கத்தையும், வருத்தத்தையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. “பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமுமான உரை இது” என்று மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ராமன் நாயர், தோமா என்ற இருவரையும், சின்ன நீலாண்டன், பாருக்குட்டி என்ற இரு யானைகளையும் மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற கதையைப் பஷீர் எழுதியுள்ளார். இக்கதையில் ராமன் நாயர், ஐம்பது ரூபாய் ஒப்பந்தக் கூலி அடிப்படையில் யானையைத் திருடுவதற்குச் செல்கிறார்; இருட்டில் யானை மாறிவிட நீலாண்டன் என்னும் கொம்பன் யானையைப் பிடித்து கொண்டுவருகிறார்; அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளால் ராமன் நாயருக்கு ‘ஆனைவாரி ராமன் நாயர்’ என்ற பெயர் கிடைக்கிறது. மரக்குருசில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவிற்குப் பொன்குருசு எதற்கு என்று கேட்டு ஆலயத்தில் இருந்த தங்கச்சிலுவையைத் திருடிக் கொண்டுவரும் தோமாவிற்குப் ‘பொன்குருசு தோமா’ என்ற பெயர் கிடைக்கிறது. ராமன் நாயர், தோமா மற்றும் இரண்டு யானைகளை மையமாக வைத்துப் பஷீர் இக்கதையை நகைச்சுவையாகக் கூறிச் செல்கிறார்.
‘செவிசாய்த்துக் கேளுங்கள், அந்திமப் பேராசை’ என்ற உரையானது பஷீர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1992 இல் எழுதப்பட்டது. இவ்வுரை முழுவதும் பஷீர் தன்னைப் பற்றியும், தான் வாழ்ந்து கொண்டிருந்த இச்சமூகத்தைப் பற்றியும் கூறியவையே ஆகும். தான் இறக்கப் போவதாகக் கருதிய பஷீர், “அழகிய இந்த உலகில் எனக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் அநேகமாக, முழுவதும் தீர்ந்துபோனதாகவே எனக்குத் தோன்றுகிறது. நேரமெதுவும் மிச்சமில்லை” என்று கூறுகிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை எழுத்துக் களாக்கியிருப்பினும் தான் இன்னும் நினைத்து வருந்துகின்ற, மகிழ்கின்ற நினைவுகளை மீண்டும் ஒருமுறை இவ்வுரையில் பகிர்ந்துள்ளார். ‘தனக்கு மனநிலை சரியில்லாமல் இருந்ததற்கு ‘ஆல்கஹாலிக் பாய்ஸனிங்’ தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர் தன்னுடைய பயணங்கள் முழுவதுமே ‘தேடல்கள்’தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் எவ்வாறு எழுத்தாளனாக மாறினேன் என்பதையும் இங்கே பதிவு செய்கிறார்.
மனிதனின் இன்றைய நிலையைக் குறித்து வருந்தும் பஷீர், உணவு, உடை, மருத்துவ வசதிகள் இன்றி தினம்தோறும் மக்கள் ஒருபுறம் இறந்து கொண்டிருப்பதையும், மற்றொருபுறம் விஷவாயு, ஆயுதங்கள், அணுகுண்டு என்று ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருப்பதையும் கண்டு இவ்வுலகில் “பசியும் பிணியும் அமைதியின்மையும்தான் மிச்சம்” என்கிறார்.
“இறைவனின் பிரதிநிதிகளாகவே இந்தப் பூவுலகில் மனிதகுலம் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது. சிருஷ்டியில் எதுவுமே சமத்துவமானவையல்ல. சமத்துவமடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காகத்தானே அறிவைத் தந்திருக்கிறான்” என்றும் இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அன்பு, பரிவு, கருணை, அனுதாபம் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.
தன்னைப் பற்றியும், தனது அனுபவங்களைப் பற்றியுமே பெருமளவு எழுதிய பஷீர் மனித சமூகத்தின் தற்போதைய நிலையைக் கண்டு வருத்தம் கொள்பவராகவும், தான் வணங்கும் கடவுளிடம் அவர்களைக் காப்பாற்றுவதற்காக மன்றாடுபவராகவும் இருக்கிறார். பஷீரது எழுத்துக்களைப் பற்றிக் கூறுவதென்றால், “கதையில் ஊடாடும் கட்டுரைத் தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகின்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக்கூடிய உரை” என்பது மொழிபெயர்ப்பு ஆசிரியரின் கூற்று.