‘ஆமென்’ என்னும் நூலின் உட்தலைப்பாக ‘ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு’ என்னும் தலைப்பு இடம்பெற்றுள்ளது. கிறிஸ்தவப் பெண் துறவியான சகோதரி ஜெஸ்மியின் துறவற (கன்னிகாஸ்திரீ) வாழ்க்கையையும், இருபத்தி நான்கு வருடங்களுக்கு மேலாக அவர் நடத்தி வந்த அத்துறவற வாழ்க்கை யிலிருந்து அவரை வெளியேறத் தூண்டிய நிகழ்வு களையும் உள்ளடக்கியதே இந்நூல். ‘மலையாளத்தில் வெளிவந்த ஓராண்டுக்குள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனை யானதோடு ஆங்கிலம் உட்படப் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது’ (பின் அட்டை) என்று குளச்சல் மு. யூசுப் இந்நூலினைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
“கடினமான வாழ்க்கையனுபவங்கள் மூச்சடைக்க வைக்கும் நிலையில் என்னைப் புரிந்துகொள்கிற, மனிதத் தன்மையுள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் என்னுடைய மனதைத் திறக்கிறேன்” என்று கூறும் ஜெஸ்மியின் துயரங்களையும், மீள முடியா நினைவு களின் ஆழத்தையும் இச்சுயசரிதையில் காணமுடிகிறது.
வெண்மையான புனிதத் தோற்றம் கொண்டிருக்கும் துறவு வாழ்க்கையில் காணப்படும் சுயநலம், ஆன்மீக மீறல்கள், பாலியல் சார்ந்த கொடுமைகள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் சிஸ்டர் ஜெஸ்மி. ‘வழியும் உண்மையும் ஒளியுமான மீட்பரிடமிருந்து கிறித்தவம் விலகுகிறது’ (பின் அட்டை) என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒரு ரயில் பயணத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ஜெஸ்மி நினைத்துப் பார்ப்பதாக இக்கதை ஆரம்பமாகிறது. மேமி என்ற பெயர் கொண்டவர் ஜெஸ்மி (ஜீஸஸ்+மி) என்று பெயர் மாற்றியதையும், 1973இல் துறவற வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்தி க்கொண்டதையும், பின்பு இறைப் பணிக்காக வந்தவர், மடங்களில் கண்ட எதிர்மறையான நிகழ்வுகளையும், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களால் இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளையும், அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்கும் போது அவர்களால் இவள் ‘மனநோய்’ உடையவள் என்று சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுவதையும் தன்னுடைய அனுபவங்களின் வழியே வெளிப்ப டுத்துகிறார் ஜெஸ்மி.
பிரி டிகிரி (Pre-degree) படித்துக் கொண்டிருந்த மேமி’க்கு இயேசுவின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் துறவற வாழ்க்கைக்குள் நுழைந்து தன்னுடைய வாழ்க்கையை மக்களின் சேவைக்காக அர்ப்பணிக்க நினைக்கிறார். தன்னுடைய இந்தத் தீர்மானத்தை வீட்டில் கூறுகையில் பலமான எதிர்ப்பினை அவருடைய பெற்றோரிட மிருந்தும் உறவினர்களிடமிருந்தும் எதிர்கொள்கிறார். “அவ, பெரிய சுயநலம் பிடிச்சவ; வாழ்க்கைப் பிரச்சினைகளிலேருந்து ஒளிஞ்சுக்க நினைக்கிறா; இது ஒருவகையான தப்பித்தல் மனோபாவம்” என்கின்றனர் உறவினர்கள். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய தீர்மானத்திற்குப் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்கிறது.
துறவற வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் 1977இல் மடத்தினுள் நுழைகிறார். அங்கு அவர் காணும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவரை அதிர்ச்சி அடைய செய்கின்றன. துறவு என்னும் திரைமறைவிற்குள் நிகழும் நிகழ்வுகள் வெளி உலக நிகழ்வுகளைவிட மோசமானதாகவும் அச்சுறுத்துவதாக வும் இருக்கின்றன. “அங்குள்ள பெரும்பாலான கன்யாஸ்திரிகளும் ஜோடிகளாகவே இருந்தனர். சேர்ந்தே திரிவது; உண்பது; வேலை செய்வது; கேளிக்கைகளில் ஈடுபடுவது; குளியலறையிலும் அவர்கள் ஒன்றாகவே இருப்பார்கள். ஜோடியாக இல்லாமல் வாழ்வதென்பது அங்கு சிரமமான காரியம். உடம்புக்கு சரியில்லாமலோ சாப்பிடாமலோ இருக்கும்போது தேவையை அறிந்து பரிபாலனைச் செய்வதற்கு அவரவருடைய இணைகள் மட்டும்தான் உதவியாக இருப்பார்கள்” அதுமட்டுமன்றி “நிறைய ஆதரவாளர்களைக் கொண்ட அணிகளாகப் பிரிந்து, பரஸ்பரம் யுத்தம் நடத்துகிற இரண்டு வேறுபட்ட குழுக்கள் இங்குச் செயல்பட்டு வந்தன. ஏதாவதொரு குழுவில் சேராத யாரும் இங்கே அமைதியான முறையில் வாழ்ந்துவிட இயலாதுஇப்படியான அதிகாரம், சுரண்டல், வன்முறை, பாலியல் கொடுமை கள், தாங்கள் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட துறவு வாழ்க்கைக்கு நேர்மாறான வாழ்க்கை முறைகள், பொன், பொருள் மீதான ஆசைகள், பொய்யான வெளித் தோற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு திகைக்கிறார்.
தன்னை விட உயர் பதவியில் இருக்கும் கன்யாஸ்திரிகள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும்போதும் அதனை எதிர்க்கும்போதும் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். “உடல்ரீதியாக உனக்குப் பிரச்சினையெதுவும் வரவில்லையென்றால் உன்னை மனநோய் மருத்துவரி டம் அழைத்துக் கொண்டு போவேன்” என்று கூறி அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றதோடு, வெளி உலகிற்கும் ‘இவள் மனநோயாளி’ என்று கூறுகிறார் புரொவின்ஷியல் மதர் க்ளவ்டியா.
கிறிஸ்தவப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் பொருளாதாரச் சுரண்டல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் ஜெஸ்மி. “சில விதிமீறல்கள் நடப்பதையும் நான் அப்போதுதான் கவனித்தேன். என்னால் கவனிக்க மட்டுமே முடிந்தது. ஏழ்மை விரதமெடுத்த கன்யாஸ்திரிகள் தங்கள் வீடுகளுக்கும் உறவினர் வீடுகளுக்கும் விலையுயர்ந்த பொருட்களை யும் பணத்தையும் கொண்டு செல்வதுண்டு. சில நேரங்களில் என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகும்போதுதான் இதையெல்லாம் பார்க்கவும் அறியவும் செய்தேன்” என்கிறார் ஜெஸ்மி.
“அவளுடைய கர்ப்பப்பையை நீக்கம் செய்த பிறகுதான் என்னுடைய மனம் ஆறுதலடைந்திருக்கிறது. இரவு நேரங்களில் அவள் வேறு எங்காவது செலவழிக்க நேர்ந்த ஒவ்வொரு தடவையும், நாங்களெல்லாம் பயத்துடன்தா னிருப்போம்” என்று கர்ப்பப்பை நீக்கம் செய்த கன்யாஸ்திரியைப் பற்றிக் கூறுகிறார் சுப்பீரியர் ஒருவர். சமூகத்தில், வாழ்வதற்கு வழியின்றியும், சூழ்ச்சிகளின் மூலமாகவும் பாலியல் தொழிலுக்கு வரும் மனிதர்களைக் குறிப்பாகப் பெண்களை ‘மோசமான வர்கள்’ என்று முத்திரை குத்தும் இச்சமூகம் தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துத் துறவு வாழ்க்கையில் நுழைபவர்கள், பாலியல் தொழிலாளர்களைவிட கீழ்த்தரமான நிலைக்குச் சென்றாலும் சமூகத்தில் ‘உயர்ந்தவர்களாக’வே மதிக்கப்படுகின்றனர். ‘கிறிஸ்தவம் – துறவு வாழ்க்கை’ என்ற மதப்போர்வைக்குள் தங்களை அடைத்துக் கொண்டவர்கள் எந்தப் பணிக்காக வந்தார்களோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தங்களுடைய சுகத்திற்காகவும் சந்தோசத்திற்காகவும் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது இங்கே வெளிப்படும் கருத்து. பாவம் செய்தவர்களின் பாவத்தைச் சுமந்த இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் அன்றைய மக்கள். ஆனால் இன்று அவர் பெயரால் மக்களுக்குப் பணிவிடை செய்ய வந்தவர்களே அவரைச் சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வெளிப்படுத்தல்களினால் ஜெஸ்மி அனுபவித்த பிரச்சினைகளையும், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நூலின் இறுதியில் குறிப்பிட்டு ள்ளார். “என்னைக் கடித்துக் குதறத் தயாராக இருக்கும் சிங்கக்கூட்டத்துடன் நான் மோத வேண்டியதாயிற்று” என்று கூறும் ஜெஸ்மி, குறிப்பிட்ட காலத்தில் துறவற வாழ்க்கையைத் துறக்கிறார். அவ்வாறு துறந்து வரும் இவரை ஒரு பெண்ணாகவே ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவரது குடும்பம், இந்தச் சமூகம் இவற்றின் அவலநிலையை வாசகனால் உணர முடிகிறது.
தாங்க முடியா இன்னல்களை அனுபவித்துப் பல போராட்டங்களையும், வேதனை களையும் தாண்டி, மடத்திலிருந்து வெளியேறும் பெண் துறவிகளின் வாழ்க்கையானது, குடும்ப உறுப்பினர்களது வேறுபாட்டி னாலும், பொதுமக்களின் தரக்குறைவான பேச்சுக்களாலும், பொருளாதாரப் பிரச்சினைகளாலும் தொடரும் போராட்டமாகவே நகர்ந்து செல்கிறது. “சபையோ குடும்ப உறுப்பினர்களோ, மடத்தைவிட்டு வெளியேறிய கன்யாஸ்திரிகளுக்குச் சல்லிக்காசு கூட கொடுக்க முன்வராத இந்தச் சூழலில் அவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்வார்கள்? அதில், யாருக்குமே மடத்திற்கெதிராகவோ குடும்பத்திற்கெதிராகவோ வழக்குப் போடுகிற துணிச்சலோ அதற்கான பொருள் வசதியோ இருப்பதில்லை. இந்நிலையில், நான்கு சுவர்களுக்குள் கிடந்து செத்துப்போக வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்” அநீதிகளை எதிர்த்துப் போராடும் மனிதர்களுக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதானா என்பதற்கு இச்சமூகம்தான் பதில் கூற வேண்டும்.
“பொறுமையைப் பற்றிய சில முன்தீர்மானங்கள்தான் என்னுடைய வாழ்க்கையை நகர்த்திச் சென்றன. ஒருபோதுமே ‘முடியாது’ என்னும் வார்த்தையைச் சொல்லமாட்டேன் என்று நான் இயேசுவிடம் சொல்லியிருந்தேன். இது என்னுடைய உறுதியான முடிவு. கண்ணீரும் வேதனைகளும் புகார்களுமிருந்தா லும் இயேசுவிடமிருந்து கிடைத்த எல்லா அனுபவங்க ளையும் நான் சகித்தே வாழ்ந்து கொண்டிருந்தேன்” எனக் கூறும் ஜெஸ்மி மடத்திலிருந்து வெளியேறியபோது இயேசுவையையும் கிறிஸ்தவத்தின் கருணையையும் உடன்கொண்டு வந்ததாகவும் கூறுகிறார். விமர்சனப் பார்வையில் ஜெஸ்மி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத் தோன்றுகிறார். எந்த நிலையிலும் அவர் தன்னுடைய சுயமரியாதையை இழக்கத் தயாராக இருந்ததில்லை.