சென்ற வாரம் எங்கள் பள்ளியில் புதுக்கோட்டை யிலிருந்து வந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியினர் நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சி ஆரம்பித்து முடியும் வரை மாணவர்களின் உற்சாகத்தைப் பார்க்க வேண்டுமே. சிறிதும் குறைவின்றி கரைபுரண்ட உற்சாக வெள்ளம். நான் வகுப்பறையில் காணாத உற்சாக வெள்ளம். பொறாமையாகத்தான் இருந்தது அந்த சர்க்கஸ் கலைஞர்கள் மீது. இரண்டு மணி நேரம் சிறிதும் கவனச்சிதறலின்றி எவ்வாறு மாணவர்களை உற்சாகமாக வைத்திருந்தனர். வகுப்பறையில் உம்மென்றிருக்கும் மாணவர்கள் காட்டிய உற்சாகம், காட்டிய சிரிப்பு முகம் நான் எவ்வளவு முயன்றும் வரவழைக்க சிரமப்படுவது, இங்கே இயல்பாய் வெளிப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்கிறேன். இதனை எழுதியுள்ளவர் ஆணியாய் அறையப்படும் கல்வியை விதையாய் விதைப்பதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தும் கல்வியாளர், பேராசிரியர் ச.மாடசாமி. இந்த புத்தகத்தில் மொழி, பண்பாடு, கல்வி குறித்த ஒன்பது கட்டுரைகள் உள்ளன. இந்த கட்டுரைகள் பேராசிரியரின் அறிவொளிக்கால அனுபவப் பதிவுகள். இதில் உள்ள கொலையும் கொண்டாட்டமும், அறிவொளியும் இடதுசாரிகளும் போன்ற சில கட்டுரைகள் கல்வி குறித்த கட்டுரைகளிலிருந்து சிறிது விலகி இருந்தாலும் நிச்சயமாக நமக்குப் பிடித்தவையாகவும்,கல்வியோடு தொடர்புடையதாகதாகவும் இருக்கும். மற்ற கட்டுரைகளில் தனது அனுபவங்களை மிக எளிமையாக விவரித்துள்ளார். முதல் கட்டுரையான ஆளுக்கொரு கிணறில், தான் பணிபுரிந்த கல்லூரியில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த வணிகவியல் துறையின் பச்சையம்மாளின் துணிவையும், தனக்கு ஒத்துவராத விஷயங்களுக்கு அவர் சொல்லும் “நோ” என்னும் மறுப்பு சொல்லும் திறனையும் (Refusal skill) வெகுவாகப்பாராட்டுகிறார்.
பச்சையம்மாள் இவரிடம் மிகவும் இயல்பாக துறை, மாணவர்கள் பற்றி விவாதிக்கிறார். ஆனால் அதே பச்சையம்மாள் ஒரு சமயம், தான் மாணவர்களோடு இயல்பாகப் பழகுவதை சிலர் தவறாகப் பேசுவதாக கழிவிரக்கத்துடன் வருத்தமாகக் கூறுகிறார். பிறகு பச்சையம்மாள் கோபத்துடன் “என்னைக் குறை கூறுபவர்களை கொஞ்சம் கணிப்பொறித் துறைக்குச் சென்று பார்க்கச் சொல்லுங்கள், ஆணும் பெண்ணும் கூத்தடிக்கிறாங்க” என்று சொல்லிச் செல்கிறார். இதனைக் கேட்ட பேராசிரியர் ச.மாடசாமிக்கு சுருக் என்கிறது. அதிர்ச்சி அடைகிறார்.. பி.இ படித்த ஆண்களும் பெண்களும் கணினித்துறைக்கு ஆசிரியர்களாக வந்திருந்தனர்.. புதிய காலத்தின் துளிர்கள்,சிரிப்பார்கள்;அரட்டை அடிப்பார்கள்;இயல்பாகத் தொட்டுப் பேசிக் கொள்வார்கள். பச்சையம்மாளுக்கு இது உறுத்துகிறது. பச்சையம்மாளை விமர்சித்தவர்கள் கிணற்றுத் தவளைகள் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் கோபங்கொண்ட பச்சையம்மாள் இன்னொரு கிணற்றுக்குள் இருந்தல்லவா பேசுகிறார்?. எவ்வளவு பெரிய ஆளுமை இந்த பச்சையம்மாள்! பறக்கிற பறவை மாதிரி ஒரு சுதந்திரமான ஆளுமை! ஆனால் பறவைகளுக்குள்ளும் ஒரு கிணறு இருக்கிறதே என்று வருத்தப்படுகிறார். மேலும் இவ்வாறு ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் ஒவ்வொரு வகையான கிணறைக் குறிப்பிட இந்த கட்டுரைக்கு மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் தலைப்பாகவும் "ஆளுக்கொரு கிணறு" என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல. மிகச் சிறந்த கட்டுரை.
நாற்றம் அடிக்கும் வகுப்பறை என்னும் தலைப்பிலான கட்டுரையில் வகுப்பறை விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். நம் வகுப்பறை கேள்விகளற்று விவாதங்களற்று ஒடுங்கிக் கிடப்பதை குறை கூறுகிறார். விவாதங்களை உற்பத்தி செய்ய முடியாது. விவாதங்கள் தோன்ற வேண்டும். விவாதங்கள் தோன்ற தளம் வெதுவெதுப்பாகவும்,சூழல் இணக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.பெரும்பாலான சமயங்களில் நாம் விவாதங்களை முன்னெடுக்காததற்குக் காரணம் வகுப்பறை கட்டுக்கோப்பு குழைந்து விடுமென்ற பயம். இந்த பயம் நாற்றத்துக்குக் காரணமாகிறது. எதிராகப் பாயும் விமர்சனங்களைப் பதற்றம்,பயம் இல்லாமல் சந்திக்கும் பக்குவப்பட்ட ஆசிரிய மனம் வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்திரவாதம் ஆகிறது என்கிறார்.
காந்தியின் வகுப்பறை என்ற கட்டுரையை காந்தி போற்றிய சிந்தனையாளரான டால்ஸ்டாயிடமிருந்து ஆரம்பிக்கிறது. தரம்,ஒழுக்கம் என்ற பள்ளி அமைப்பின் இரட்டை அஸ்திவாரங்களுக்கு மாற்றாக “குழந்தைகளின் சுதந்திரம், குழந்தைகளின் கற்பனைத்திறன்” என்ற இசைக்குரல் டால்ஸ்டாயிடம் இருந்து கேட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் என்ற கர்வ மொழியை மறுத்து மாணவர்களோடு உரையாடுதல் என்ற சுமூக மொழியை அறிமுகப்படுத்தி கல்வியின் அடித்தளம் அனுபவம் என்பதையும் கற்பதற்கான வழி சுதந்திரம் என்று டால்ஸ்டாய் கருத்தை தனது எளிய மொழியில் நமக்குக் கடத்துகிறார் ச.மா. டால்ஸ்டாய் வழியில் உடல் உழைப்போடு கூடிய கல்வி என்னும் சித்தாந்தத்தை வலியுறுத்திய காந்தியக் கருத்துக்களோடு இணங்கிப் போகிறார் நூலாசிரியர்.
அடுத்து அகங்காரத் தமிழ் என்னும் கட்டுரை. அன்றிலிருந்து நேற்று பாடத்திட்ட வடிவமைப்புக் கூட்டம் வரை பேராசிரியர் ச.மா வலியுறுத்தும் பாடநூல்களில் எளிய தமிழ் இடம்பெற வேண்டும் என்னும் கருத்துக்களை உள்ளடக்கியது இந்தக் கட்டுரை. தான் ஒரு தமிழாசிரியராய் பாடப் புத்தகங்கள் 1. திணிப்பதுதான் கல்வி 2. கடினமாக இருப்பதுதான் கல்வி என்ற இரு பிழையான அளவுகோல்களைக் கொண்டு உருவாக்கப்படுவதை மிகவும் தவறென்கிறார். நமது பாடப்புத்தகங்கள் ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் என்ற மூன்றும் இணைந்த அகங்காரத்தின் வடிவம் என்று கடுமையாகச் சாடுகிறார். உதாரணமாக முதல் வகுப்பு பாடப் புத்தகத்தில் அகவை, ஞாலம்,நெய்தல், இயல்வது கரவேல், உடையது விளம்பேல் போன்றவை . பேராசியரின் கோபம் நியாயமானதே. பாடப்புத்தகத்தின் கை கண்ணுக்குத் தெரியாத கை. அது குழந்தைகளைக் கொத்திப் பிடுங்குவதைக் கூரிய பார்வையும், மனித நேய நெஞ்சும் கொண்டவர்களே காண முடியும்; உணர முடியும் என்கிறார் பேராசிரியர். அப்படியெனில் அதனைக் கண்டு உணர்ந்து எங்களுக்கு கடத்திய பேராசிரியர் ச.மா என் நெஞ்சில் பேரன்பும் பெருங்கருணையும் கொண்டு விருட்சமென உயர்ந்து நிற்கிறார்.
ஏழாவது கட்டுரை கல்வியும் கலாசாரமும் என்னும் கட்டுரை. இதில் ஆசிரியர் தனது அறிவொளி அனுபவத்தையும் வகுப்பறையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். ஒரே சத்தமும், சிரிப்புமாய், விடுகதை, பாடல் என கொண்டாட்டமாய் நகரும் அறிவொளி வகுப்பறை. இறுகி உறைந்து போய் கிடக்கும் வழக்கமான வகுப்பறை. பிறகு தனது நீண்ட கால அனுபவத்தில் நமது சமூகத்தின் கலாச்சாரத்தையும் கல்வியையும் ஒப்பிட்டு “காலம் ஓடுகிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எங்கோ போய்விட்டன. ஆனால் கலாச்சாரம் மட்டும் நின்ற இடத்திலேயே நிற்கிறது. வாழ்க்கை வசதிகளை பெருக்குவதில் கவனம் செலுத்திய கல்வி கலாச்சாரப் பிடிமானங்களை அசைத்துச் சிந்தனை வழங்குவதில் பின் தங்கியிருக்கிறது” என்னும் சொற்களை கல்வியிலேயே நின்று, நிதானித்து உழன்று, வாழ்கிற ச.மாடசாமி என்னும் ஆளுமையின் வாக்குமூலமாகக் கூட கொள்ளலாம்.
வகுப்பறையில் மாணவர்க்கு 50%,ஆசிரியர்க்கு 50% இட ஒதுக்கீடு என்ற எட்டாவது கட்டுரையில், வகுப்பறையில் மாணவனுக்குரிய இடத்தை நாம் உணரவும் இல்லை, கொடுக்கவும் இல்லை என குற்றம் சாட்டுகிறார். மேலும் கல்வி மாணவனிடமிருந்து தொடங்குகிறது; ஆசிரியரிடம் இருந்து அல்ல. மாணவர்களுக்குக் கற்பிப்பதைவிட அவர்கள் தம்மைத்தாமே கண்டுபிடித்துக் கொள்ள உதவுவதுதான் ஆசிரியரின் பணி; ஆசிரியரின் தலையீடு இன்றி, தங்கள் செயல்பாடுகளைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஒரு புதிய குழுவுடன் வேலை செய்யும் போது அந்தக் குழு நம் வார்த்தைகளைப் பெரிதும் எதிர்பார்க்கும் பட்சத்தில் 50% ஆசிரியர் 50% மாணவர் என்ற விகிதத்திலும் நம் பணியைத் தொடங்குவது நல்லது என்ற பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாவ்லோ பிரையரின் தீர்வை நமக்கும் முன்வைக்கிறார். இந்த 50% இட ஒதுக்கீடு மாணவர்கள் புதியவர்களாய் இருக்கும் போதுதான். பழகப்பழக அவர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் மாடசாமி.
அடுத்து விவாதமும் கற்பனையும் என்ற கட்டுரை. இதில் உரையாடல் என்பது அர்த்தமுள்ள உரையாடலாகவும், புரிதலை உண்டாக்குவதற்காக நடத்தப்படுவதாகவும், முடிவு எடுக்கும்போது தேவைப்படுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார். பிரக்ஞைகளும் , அகந்தைகளும், அறிவுகளும், புரிதலின்மையும் விவாதத்தின் தடைகளென்கிறார். புதிய குழுவுடன் மனமார இணைந்து பணியாற்ற கல்வியாளர் பாவ்லோ பிரையர் பயன்படுத்தும் வர்க்கத் தற்கொலை (class suicide) என்னும் தான் சார்ந்த வர்க்கத் தற்கொலை நடக்க வேண்டும் என்கிறார். ஓர் ஆசிரியர் ஏராளமான தற்கொலைகளைச் செய்துவிட்டு ‘ சுத்த மனிதராக’ வகுப்பறைக்குள் நுழைந்தால்தான் அவர் விவாதம் நடத்த முடியும்; விவாதத்தை அனுமதிக்க முடியும் என்றும் விவாதத்திற்கு வழி காட்டுகிறார்.
இவ்வாறு வகுப்பறையில் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை நமக்கு இந்நூல் வழியே எளிய முறையில் கடத்த முயற்சி செய்திருக்கிறார் நூலாசிரியர்.
இவை தவிர இந்நூலில் உள்ள பெண்ணைக் கொலை செய்து சிறு தெய்வமாக்கிய கட்டுரையும், பிணம் வேகும் துணி வேகாது(இட்லி), வெள்ளைக்காரன் பூக்க வெகுபேர் காத்திருக்க(சாதம்) போன்ற எளிய மனிதர்கள் அறிவொளி இயக்க வகுப்புகளில் வெளிப்படுத்திய விடுகதைகள்,சொலவடைகள் போன்றவைகளைப்பற்றிய சில கட்டுரைகளும் உங்களை நிச்சயம் வசீகரிக்கும்.