வரலாறு என்பது பொதுவாகவே சமூகத்தில் வலுத்தவர்கள் எழுதியதாகவும் பக்கச் சார்புடையதாகவும் இருக்கிறது. இந்நிலையில், எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களுடைய வாய்மொழி ஆதாரங்களிலிருந்தும் வரலாற்றை உருவாக்கி, தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கு அடித்தளமிடும் பெரும் பணியைச் செய்தவர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் (1943). கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நீண்டுவரும் அவருடைய ஆராய்ச்சிப் பணிகள், தமிழ் மக்களை மானுடவியல் வெளிச்சத்தில் புரிந்துகொள்வதற்கு மிகப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
தமிழ்ப் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராகப் பரிணமித்தவர். தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் 1967 முதல் 2001 வரை 34 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். மார்க்சியக் கொள்கைப் பின்னணியுடன் தமிழ்ச் சமூகம் குறித்து அவர் ஆராய்ந்து வெளியிட்ட முடிவுகளும் புத்தகங்களுமே அவருடைய முதன்மை அடையாளங்களாக மாறின.
மார்க்சியப் பின்புலம் கொண்ட ஆய்வறிஞர்களின் வருகை தமிழகத்தில் புதிய தடத்தைச் சமைத்தது. அதற்குக் காரணமாகத் திகழ்ந்த பேராசிரியர் நா.வானமாமலையின் முதன்மையான மாணவர்களில் ஒருவராக சிவசு இருந்தார். வானமாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்த ஆய்வு முறைமையை மிகப் பெரிய அளவில் எடுத்துச்சென்றதில் சிவசுவுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தது மட்டுமில்லாமல், ஒரு கல்விப்புலமாக மானுடவியல் தமிழகத்தில் காலூன்றுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே அந்த அடிப்படையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் அவர். அவர் கவனப்படுத்திய விஷயங்களும் ஆராய்ச்சி வழியாக அவர் முன்னிறுத்திய முடிவுகளும் நம் மண்ணிலிருந்து கிளைத்தவையாக இருந்தன. நடைமுறைக் களம் சார்ந்த அவருடைய ஆராய்ச்சி அணுகுமுறையை அவரது மிகப் பெரிய பலமாக சக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கோட்பாடுகள், கல்விப்புல சட்டகத்துடன் தங்கிவிடாத அவருடைய இந்த அணுகுமுறை, தனிப்பட்ட முறையில் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அவரது பணிக்குத் தனி அடையாளத்தை வழங்கியது.
“கிராமப்புற விவசாயிகளிடம் வேலைசெய்து அனுபவப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட்டிடம் உள்ள நுட்பம் பேராசிரியர் சிவசுவிடம் தென்படும். பண்பாட்டு அரசியல், பண்பாட்டு நுண் அரசியல் என்ற பார்வையுடன் இன்று முன்வைக்கப்படும் வாதங்களுக்குப் பேராசிரியர் நா.வானமாமலையுடன் இணைந்து அவர் அடித்தளமிட்டார்” என்று பேராசிரியர் நா.முத்துமோகன் குறிப்பிட்டுள்ளார்.
விநாயக சதுர்த்தி ஊர்வலங்களை அடிப்படையாகக்கொண்டு ‘பிள்ளையார் அரசியல்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய குறுநூல், பல பத்தாண்டுகளுக்கு முன்பே இந்துத்துவ அமைப்புகள், எப்படித் திட்டமிட்டு தங்களுக்கு வசதியாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியது. தமிழக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த ‘சமபந்தி அரசியல்’ என்கிற குறுநூலும் இத்தன்மையதே.
நாட்டார் தெய்வங்களைப் பற்றிப் பேசும்போது, மேம்போக்கான புரிதலைக் களைந்து மற்றொரு முகத்தைக் காட்டுகிறார். ‘‘நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறு முக்கியமானது. முதலாவதாக, அவையெல்லாம் இந்து தெய்வங்களல்ல. சாதி மீறிய காதல் அல்லது வேறு ஏதாவதொரு செயல்பாட்டுக்காக ஆதிக்கச் சாதிகளின் கொலைச் சம்பவங்களோடு தொடர்புகொண்டவையாகவே அந்தத் தெய்வங்கள் அமைந்திருக்கின்றன. அதனால், சாதிக்கு எதிரான போராட்டப் பதிவுகளை அவை கொண்டுள்ளன. அந்த வரலாறு நமக்கு முக்கியம்’’ என்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களுடைய பண்பாடு சார்ந்து தொடர்ச்சியாக இயங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதையும்கூட குறுகிய ஒன்றாக அவர் வரையறுத்துக்கொள்ளவில்லை. தொழிலாளர், விவசாயிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடிகள் உள்ளிட்டோரையும் அவர் ஒடுக்கப்பட்டோராகவே பார்த்தார்.
நெய்தல் தினை, மீனவர்கள், தமிழகத்தில் கிறிஸ்தவம், இஸ்லாமியப் பண்பாடு, நாட்டார் வழக்காறுகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கிறார். ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் எழுதிய ஆய்வு நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. பனை மரத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பண்பாட்டுரீதியில் ஆராயும் ‘பனை மரமே பனை மரமே’, ‘தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் களஞ்சியம்’, ‘தமிழக நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ போன்றவை அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள். இவை தவிர இலக்கியத்தில் பழங்குடி, தலித், பெண்ணியம், கிறிஸ்தவ நாட்டுப்புறவியல், இஸ்லாமிய நாட்டுப்புறவியல், அடித்தள மக்கள் வரலாறு, புழங்கு பொருள் பண்பாடு, பண்பாட்டு அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு என பல்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாகத் தன் ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்.
இப்படியாக, மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஒன்றான சமூக வரலாற்றுப் பார்வையுடன் தமிழகத்தை அதன் இயல்புகளுடன் விளக்கத் தொடர்ந்து இயங்கிவருகிறார். சமூகப் பண்பாட்டு ஆய்வு என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு கல்விப்புலத்தில் தங்கிவிடுவதாகவும் நூல்களாகவும் உருப்பெறுவதற்கானது மட்டுமல்ல; சமூகப் பண்பாட்டு ஆய்வுகள் சமூக மாற்றத்தைத் தூண்டும் செயல்பாடு என்பதை எழுத்து வழி நிகழ்த்திக் காட்டியவர் பேராசிரியர் சிவசு.
(நன்றி: தி இந்து)