குடந்தையில் என் அறையிலிருந்த ஒரு எட்டடுக்குத் திறந்த புத்தக அலமாரி சில நாட்களுக்கு முன் கவிழ்ந்துவிட்டது. நல்ல வேளையாக நான் அருகில் இல்லை. அந்த அலமாரியைச் சுவற்றில் துளையிட்டு இறுக்கி, இன்று புத்தகங்களை அடுக்கத் தொடங்கினேன் எல்லாம் பழைய தமிழ் நூல்கள். பிற ஆங்கில நூற்கள் பலவும் சென்னையில் எனது வீட்டிலும், மகள் வீட்டிலுமாகப் பிரிந்து கிடக்கின்றன, ஒரு இருபதாண்டு எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் தொகுப்பு நூல்கள், ஏராளமான சோவியத் மார்க்சீய நூல்கள் எல்லாம் குடந்தையில் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய லாஃப்ட்-களில் உள்ளன.
அடுக்கும்போதுதான், ஆகா, என்னென்ன மாதிரியான நூல்களெல்லாம் நம்மிடம் உள்ளன என ஒரு கணம் வியந்து போனேன். கென்னெத் கால்ப்ரெய்த்தின் ‘சமாதானத்தின் புதிய பரிமாணங்கள்’, மு.அருணாசலத்தின், ‘குமரியும் காசியும்’, சரத்சந்திரரின், ‘அசலா’, ஹெப்சிபா ஜேசுதாசனின், ‘மானீ’, ப்ளெஹனோவின், ‘கலையும் சமுதாய வாழ்க்கையும்’, சுப்பிரமணிய சிவாவின், ‘நளின சுந்தரி’, டபிள்யூ. ஜி. ஆர்ச்சரின் ஆய்வுரையுடன் கூடிய ‘வித்யாபதியின் காதற் பாடல்கள்’, காமராசரின் 60ம் ஆண்டு சிறப்பு மலர், பார்த்தசாரதி எழுதிய தி.மு.க வரலாறு, தமிழ் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவைய்யாவின் ‘கிளாரிந்தா’……
கிளாரிந்தா கையில் அகப்பட்டவுடன் புத்தகங்களை அடுக்குவதை நிறுத்திவிட்டு, அதைப் புரட்டத் தொடங்கினேன். சுமார் 20 ஆண்டுகள் முன்பு படித்துக் கிறங்கிய நாவலது. மறைந்த ஆங்கிலப் பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து அவர்கள் அதை அற்புதமாகத் தமிழில் ஆக்கியிருப்பார். ஆம், முதல் நாவல்களில் ஒன்றாகிய ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதிய மாதவையர், கிளாரிந்தாவை ஆங்கிலத்தில்தான் எழுதினார். இதன் முதற் பதிப்பு 1915ல் வெளியிடப்பட்டது. ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியாருக்கு அந்நூலை மாதவையர் அர்ப்பணித்திருந்தார்.
1970களில் காத்திரமான தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ‘கிறிஸ்தவ இலக்கிய சங்கம்’ (CLS), 1976ல் இந்தத் தமிழ் மொழி பெயர்ப்பைக் கொண்டு வந்தது. என்னிடமுள்ள அந்த முதற் பதிப்பின் அப்போதைய விலை பத்து ரூபாய். மாதவையரின் மகனும், முன்னாள், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியுமான மா.அனந்த நாராயணன் அவர்கள் அடக்கமான சிறு முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.
தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கிளாவரிந்தபாய் என்கிற உண்மையான வரலாற்றுப் பாத்திரம்தான் இந்த நாவலின் நாயகி. பிறந்த அன்றே பெற்றோரை இழந்து, தாத்தாவால் வளர்க்கப்பட்டு, முதிய பார்ப்பனர் ஒருவருக்குப் பால்ய மணம் செய்து கொடுக்கப்பட்டவர் கிளாவரிந்தா. இருபது வயதில் விதவையான அப்பெண்ணை, சொத்துக்காகக் கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றுகிறார்கள் (சுமார் கி.பி 1770). அநேகமாகத் தஞ்சையில் நடைபெற்ற கடைசி உடன்கட்டையாக அது இருக்கலாம்.
செய்தி அறிந்த ஆங்கில தளபதி லிட்டில்டன் அவளைச் சிதையிலிருந்து காப்பாற்றித் தூக்கி வந்து சிகிச்சை அளிக்கிறார். பின்னாளில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி, அவரையே திருமணம் செய்து கொண்டு திருநெல்வேலி வந்து சமயத் தொண்டு புரிந்து மரித்த (1860) அவரது வரலாற்றை ஒரு அற்புதமான காதற் காவியமாக்கியுள்ளார் மாதவையர்.
இந்நாவலை நான் முதலில் படித்த போது, தஞ்சையில் லிட்டில்டனின் மாநம்புச் சாவடி இருப்பிடம் எங்கிருந்தது, கிளாவரிந்தாவை எந்த இடத்தில் உடன்கட்டை ஏற்றி இருப்பார்கள், வல்லத்தில் எங்கே ஸ்வார்ட்ஸ் பாதிரியாரை இத்தம்பதியர் சந்தித்திருப்பர் எனத் தேடி சைக்கிளில் அலைந்தது நினைவுக்கு வந்தது. தஞ்சை வரலாற்றாய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியத்தையும் ஒருமுறை சந்தித்து இது குறித்து விசாரித்தபோது அவர் இதில் இம்மியும் ஆர்வம் காட்டவில்லை.
பாளையங்கோட்டையில் கிளாரிந்தா, தலித் மக்களுக்கென வெட்டிய கிணறு (பாப்பாத்தியம்மா கிணறு), அவர் கட்டிய தேவாலயம் முதலியன இன்னும் உள்ளன எனக் கேள்விப்பட்டு அவற்றைப் பார்க்க வேண்டுமென நான் கொண்ட ஆவல் 2005ல்தான் நிறைவேறியது. பாக்கியமுத்து அப்போது இறந்திருந்தார். ஈழத்து தலித் எழுத்து முன்னோடி கே.டேனியல், பேரா.சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோரை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து நவீன இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தி, கட்டுரைகளை நூல்களாகவும் (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில் வறுமையும் சாதியும்’) வெளியிட்டவர் அவர். சரோஜினி பாக்கியமுத்து அவர்கள் என்னை அன்புடன் வரவேற்று தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் குறித்த அவரது ஆய்வான, ‘விவிலியமும் தமிழும்’ நூலில், அ.மார்க்ஸுக்கு மிக்க அன்புடன் எனக் கையொப்பமிட்டுத் தந்த நாள் 21.5. 2005.
மாலை 3 மணிக்க்குப் புரட்டத் தொடங்கினேன். சரசரவென 212 பக்கங்கள் ஓடிவிட்டன. குறைந்த பட்சம் நான்கு முறையேனும் கலங்கிய கண்கள் எழுத்துக்களை மறைத்தன. விரிவாக எழுத வேண்டும் பின்னொருமுறை…
இன்னும் கொஞ்சம் மாதவையா….
மாதவையாவின் பிற நாவல்களையும் படித்துவிடலாம் என இன்று ‘சத்தியானந்தனை’த் தேடி எடுத்துவிட்டேன். ‘பத்மாவதி சரித்திரத்தை’ வாசு தருகிறேன் எனச் சொலியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்களுக்கும், தமிழில் அவர் எழுதியவற்றிற்கும் ஒப்பீட்டு ரீதியில் ஏதும் வேறுபாடுகள் உள்ளனவா எனப் பார்க்கலாம் எனத் தோன்றியது.
சத்தியானந்தன் நாவலும் ஒரு வகையில் கிளாரிந்தாவைப் போல ஒரு வரலாற்று நாவல்தான். கிளாரிந்தாவைப்போல சத்தியானந்தனை வரலாற்றில் அடையாளப்படுத்திவிட இயாலாதபோதும், சத்தியானந்தன் என ஒருவர் அப்போது அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கவில்லை எனச் சொல்ல முடியாது என்றார் இத் துறையில் விரிந்த அறிவு பெற்ற பேரா.ஆ.சிவசுப்பிரமணியன். எப்படியோ வெறும் வாழ்க்கைச் சரிதமாக இல்லாமல் ஒரு புனைவாகப் படைப்பதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தை இழக்க ஒரு சிறந்த கலைஞனான மாதவையாவுக்கு மனமில்லை என்பதுதான் கிளாரிந்தாவையும் சத்தியநாதனையும் பார்க்கும்போது நமக்குப் படுகிறது. வரலாறு வெளியிலுள்ள ஏதோ ஒரு ‘உண்மையை’ச் சார்ந்திருப்பது. புனைவு தன் உண்மைகளையும் நியாயப்பாடுகளையும் தானே உருவாக்கிகொள்வது. வெளியிலிருந்து மிரட்டும் “உண்மை”யின் தொந்தரவு இல்லாமல் சத்தியானந்தன் என்கிற பார்ப்பன சமூகத்திலிருந்து சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கு மாறிய ஒருவரின் கதையைப் படைக்க மாதவையர் மனம் கொண்டார் போலும்.
இந்நூலுக்கு மாதவையாவின் தம்பி மகனும் இன்னொரு முக்கிய தமிழ் எழுத்தாளருமான பெ.நா.அப்புசாமி ஏழு பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். மாதவையா தன் எழுத்துக்களில் “கிறிஸ்தவ மதத்தையும் அம்மதத்தைச் சார்ந்த சில பெரியவர்களையும் புகழ்ந்திருப்பதால் அவர் தம்முடைய மதத்தின் மீது பற்றற்றவர் என்றும் கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுமிக்கவர்” என்றும் ஒரு சிலரிடத்தில் நிலவும் கருத்தை மறுக்கத் தன் முன்னுரையை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். நவதிருப்பதிகளில் ஒன்றென மதிக்கப்படும் பெருங்குளம் என்னும் வைணவத் திருத் தலத்தில் பிறந்தவர் மாதவையர், வடம கௌசிக கோத்திரம். வடமொழி பயிலவில்லை. ஆங்கிலமும் தமிழும் அத்துபடி.. மத நம்பிக்கை மிக்க ஒரு குடும்பம். குடும்ப மரபுப்படி தனது முதலிரண்டு மகன்களுக்கும் பெருங்குளத் தெய்வமான அநந்த நாராயணன், யக்ஞ நாராயணன் என்கிற பெயர்களையே சூட்டியுள்ளார். மூன்றாவது மகன் ஒருவர் பிறந்தபோது அவரது பெயர் கிருஷ்ணன். மகள்களின் பெயர்கள் அம்பா, லஷ்மி. ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
கிளாரிந்தாவுக்குச் சுருக்கமாகவும் செறிவாகவும் ஒரு முன்னுரை எழுதியுள்ள மாதவையாவின் மூத்த மகன் அனந்த நாராயணனும் தன் தந்தையின் ‘மதக் கோட்பாடு’ குறித்து, ”அவர் ஒருநாளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்கிற ஆசை கொண்டவரல்ல” என்பதை அழுத்திச் சொல்கிறார். எனினும் இருவருமே பைபிளில் அவருகிருந்த புலமையையும், குறிப்பாக மத்தேயுவின் நற்செய்தியில் அவருக்கிருந்த ஈடுபாட்டையும் சொல்லத் தவறவில்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் ஏதும் பிரச்சினை இல்லை. அவரது நாவல்களைப் படிக்கும் யாருக்கும் அது விளங்கும். கிறிஸ்தவத்தின்மீது, குறிப்பாகச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் மீது அவருக்கு ஒரு பற்றும் இருந்தது. கிறிஸ்தவ மதத்தின் மையச் சரடுகளை அவர் சரியாகப் பற்றி இருந்ததும், ஒப்பியல் நோக்கில் அதை மதிப்பிடக் கூடியவராக இருந்ததும் கூட விளங்கும்.
சத்தியானந்தன் மதம் மாறியதை அறிந்து அவர் அம்மா ஆண்டாள் இப்படிச் சொல்வார்: “எங்கள் சமயத்தின்படி மனிதன் இறைவனை எந்த நாமத்தில், ரூபத்தில் வணங்கினாலும், அந்தக் கேசவன் அதை ஏத்துண்டுடறாரென்று நம்பறோம். அதனாலே சத்தியானந்தன்.. எந்தத் தெய்வத்தை வணங்கறான் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அவன் நேர்மையானவனா, நல்லவனா, கருணையுள்ளவனா வாழணும்கிறதே நான் விரும்பறது. அப்படி வாழ்ந்தால் அவன் வணங்குகிற அந்தத் தெய்வம், அது சிவனோ, விஷ்ணுவோ, அல்லாவோ, புத்தரோ, கிறிஸ்துவோ எதுவாக இருந்தாலும் அது அவனைக் கைவிடாது.”
இதுதான் மாதவையாவின் கொள்கையாகவும் இருந்தது. எனினும் அவர் நுண்மையான விமர்சனங்களை, மதமாற்ற நடவடிக்கைகள் உட்படஎல்லாவற்றின் மீதும் வைக்கவும் தவறவில்லை.
நீதியரசர் அனந்தநாராயணன், எழுத்தாளர் அப்புசாமி இருவரும் சொல்கிற தன்னிலை விளக்கம், அதாவது மாதவையா தன் நம்பிக்கைகள் மீது உறுதியாகத்தான் இருந்தார் என்பது அவர் மீது நமக்குள்ள மரியாதையைக் கூட்டத்தான் செய்கிறது; குறைக்கவில்லை. தன் நம்பிக்கைகளில் அவர் உறுதியாக இருந்தபோதும் பிற நம்பிக்கைகளை அவர், அவற்றின் சிறப்புக்களை ஏற்று அங்கீகரித்ததும் மற்றமையின் irreducible singularity யை அவர் ஏற்றதைத்தான் காட்டுகிறது.
சொல்ல மறந்து போனேன். மாதவையாவின் மரணமும் மிகக் கம்பீரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. அது 1925 அக்டோபர் 22. சென்னைப் பல்களைக்கழக செனட் அவையில் தமிழின் சிறப்புக்களை வியந்து பேசி அமர்ந்தவுடன் மூளை நரம்புகள் வெடித்து அங்கேயே உயிர் பிரிந்திருக்கிறது, அப்போது அவருக்கு வயது 53.
(நன்றி: அ. மார்க்ஸ்)