திறமைகள் உவட்டுகின்றன. திறமையின் அலட்டலை இரண்டாவது முறை பார்க்கும் போதே சலிப்புண்டாகிறது.ஆனால் ஆயிரந்தடவை காட்டினாலும் அன்பு தெவிட்டுவதில்லை. அதிலும் விளக்கு வெளிச்சத்திலும் கொட்டுச் சத்தத்திலும் தன்னை வெளிப்படுத்தாமல் கூசி ஒதுங்குகிற அன்பு ரொம்ப ரொம்ப ருசியானது’.
இப்படித் தொடங்குகிறது போயிட்டு வாங்க சார்!.. என்னும் இந்த புத்தகம். இது Good bye,Mr.Chips என்னும் தலைப்பில் 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கதை. 1934 இல் நூலாக வெளி வந்தது. நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன். இந்த நாவல் திரைப்படமாகவும் வந்து பெரு வெற்றி பெற்றது.
இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். முதன் முதலாக ஆசிரியர்- மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ். பேராசிரியர் ச.மாடசாமி இந்த நூலைப் படித்து தன் வாசிப்பனுபவமாக இதனைத் தமிழில் எழுதியுள்ளார்.
சிப்ஸ் பிறந்தது 1848இல். தனது 22 வது வயதில் லண்டனில் புரூக்பீல்டு என்னும் ஆண்கள் பள்ளியில் கிரேக்கம், லத்தீன் கற்பிக்கும் ஆசிரியராக பணியில் சேர்ந்து 44 ஆண்டுகள் பணியில் இருந்து மூன்று தலைமுறைகளைக் கண்டவர். 1896ல் தனது 48வது வயதில் காதரின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆவதற்கு முன் 25 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி விட்டார் சிப்ஸ். மனிதர் இயந்திரத்தனமாய் மாற இத்தனை ஆண்டு காலம் போதாதா?
அவரைப் பிணைத்திருந்த எந்திர பாகங்களைத் தட்டிவிட்டு , கை வீசி சுதந்திரமாக அவரை இயங்க வைத்தவள் காதரின். ஆனால் காதரின் 1898ல் இறந்து போகிறாள். காதரினோடு வாழ்ந்த ஓராண்டு காலம் சிப்ஸுக்கு மறக்க முடியாத காலம். வாழ்க்கைக்குப் புதிய அர்த்தம் கிடைத்த காலம்.
காதரின் இறந்ததும் சிப்ஸ் வாடிப்போனார். வயதாகிப் போனார். வயதான சிப்ஸிடம் கண்டிப்பு குறைந்து கனிவு கூடியிருந்தது. பதற்றம் குறைந்து நிதானம் கூடியிருந்தது. பல தலைமை ஆசிரியர்களைப் பார்த்தவர் சிப்ஸ். ஆனால் புதிதாக வந்த 37 வயதே ஆன ரால்சன் என்பவருக்கு சிப்ஸின் பாடம் நடத்தும் முறை பழசாகத் தோன்றுகிறது. அதை அவர் சிப்ஸிடமே சொல்லி மறைமுகமாக ஓய்வு பெறச் சொல்கிறார்.
இந்த தகவல் பள்ளியில் பரவி, பள்ளி முழுவதும் சிப்ஸுக்குத் துணையாய் நிற்பதைக் கண்டு சிப்ஸ் நெகிழ்ந்து போகிறார்.1913 ல் சிப்ஸுக்கு வயது 65. மூச்சுத்திணறல். மூன்று மாதங்கள் பள்ளிக்கு வரவில்லை. பணி ஓய்வு பெறுவதென முடிவெடுத்தார் சிப்ஸ். 1913 ஜுலையில் சிப்ஸுக்கு விடை பெறும் விழா. பின் பள்ளிக்கு எதிரிலேயே திருமதி. விக்கெட் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கினார்.
1916, சிப்ஸுக்கு 68 வயது. புதிய தலைமை ஆசிரியர் சாட்டரிஸ் வந்து “ திரும்ப நீங்கள் பள்ளிப் பணிக்கு வந்தால் என்ன?” என்று கேட்கிறார்.தான் தேவைப்படுவதை முதன் முதலாக சிப்ஸ் உணர்ந்தார். "வருகிறேன்"என்றார். பின் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றி விட்டு தனது உடல் நலக்குறைவால் 1918ல் சிறு ஓசையுமின்றி விலகிக் கொண்டார்.
22 வயதுக்கப்புறம் சிப்ஸ் நமக்கு அறிமுகம் ஆகிறார்.நாம் பார்த்தவரை காதரினோடு வாழ்ந்த ஒரே ஒரு ஆண்டு போக ஒரே தனிமைதான். ஆனால் ஒருபோதும் அவர் தனிமையை உணரவில்லை. அதற்குக் காரணம் புரூக் பீல்டு பள்ளி. அப்பள்ளிதான் அவர் வாழ்க்கை. ஓய்வுக்குப் பிறகும் பழைய மாணவர்கள் மட்டுமல்ல புதிய மாணவர்களும் அவரைத் தொடர்ந்து சந்தித்து வந்தார்கள். எப்போது யார் பார்க்க வந்தாலும் டீயும் கேக்கும் ரெடி. மாணவர்களின் வருகையைப் போல சிப்ஸுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு கிடையாது.
1933. சிப்ஸுக்கு வயது 85. அன்று கடைசியாக ஒரு சிறு மாணவனைச் சந்தித்து டீ , கேக்குடன் உரையாடுகிறார். அவன் “ குட் பை மிஸ்டர் சிப்ஸ்!” என்று சொல்லிச் செல்கிறான்.அதோடு அவர் உடல் நிலை மோசமாகிறது. புரூக்பீல்டு பள்ளி தலைமை ஆசிரியர் வந்து பார்த்து அனுதாபப்பட்டு “ பாவம் இவருக்கு குழந்தை இல்லாமல் போச்சே!” என்கிறார். அரை மயக்கத்தில் கிடந்த போதும் சிப்ஸுக்கு இந்த அனுதாபத்தைத் தாங்க முடியவில்லை. பதில் சொல்ல யத்தனித்தார். வாய் முணுமுணுக்கிறது. “நானா பாவம்? எனக்கா குழந்தைகள் இல்லை ? எனக்கு ஆயிரக்கணக்கான பிள்ளைகள். ஆயிரக்கணக்கில்… எல்லாம் ஆம்பளப் பசங்க!.... மறுநாள் சிப்ஸ் பணிபுரிந்த புரூக் பீல்டு பள்ளியில் அவரின் மரணச் செய்தி அறிவிக்கப்படுகிறது.
இதை வாசித்து முடிக்கையில் ஒரு சோகம் என்னில் படர்வதைத் தவிர்க்கமுடியவில்லை.பேராசியர் ச.மாடசாமி Goodbye Mr Chips என்பதன் வாசிப்பனுபவமாக இதை எழுதியுள்ளார்.